Friday, March 14, 2025
spot_img
Homeமங்கையர் குறிப்புகுடும்ப வன்முறை : பெண்களை மீட்டு வாழ்வாதாரத்துக்கும் கைகொடுப்பது சுயதொழிலே!  - சமூக செயற்பாட்டாளர் பஸ்னா...

குடும்ப வன்முறை : பெண்களை மீட்டு வாழ்வாதாரத்துக்கும் கைகொடுப்பது சுயதொழிலே!  – சமூக செயற்பாட்டாளர் பஸ்னா பாரூக் 

“பெண்களுக்கு அனைத்து வழிகளிலும் நாம் பக்கபலமாகவே இருக்கிறோம். ஏனென்றால், குடும்ப வன்முறைகளில் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தொழிலின்றி வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள்.இப்பெண்கள் குடும்ப வன்முறைகளில் சிக்கி,  வாழ்வே கேள்விக்குறியாகி நிற்கும் நிலையில் வாழ்வதற்கான வளங்களை  அமைத்துக்கொடுக்கிறோம்.சிறு கைத்தொழில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் செயற்பாடுகளில் நாமும் பங்கெடுக்கிறோம்.இதனுடாக வீடுகளில் இடம்பெறுகின்ற வன்முறைக் குற்றங்கள் குறைவது மட்டுமன்றி, பெண்கள் தங்களது பொருளாதார நிலைமையையும் உயர்த்திக்கொள்வதற்கு இது ஒரு வழியாகிறது” என கல்வியியலாளர், சமூக செயற்பாட்டாளர் பஸ்னா பாரூக் கூறுகிறார்.

குருநாகல் – சியம்பலாகஸ்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த பஸ்னா பாரூக், ‘ஒன்றுகூடுவோம் – இலங்கை’ அமைப்பின் வடமேல் மாகாண ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய சமாதானப் பேரவை மற்றும் இலங்கைக்கான அமெரிக்க துதரகத்தின் யூத் போரமின் உறுப்பினராகவும் சர்வோதய அமைப்பின் உறுப்பினராகவும் பல்வேறு சமூக நல பணிகளை நிறைவேற்றி வருவதோடு, நாட்டில் சமாதான நல்லிணக்கத்தை நிலைநாட்டும் நோக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

கல்வித்துறையில் பல வெற்றிகளை கண்ட இவர், சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டுவருவது தொடர்பாக எம்மோடு பகிர்ந்துகொள்கையில்,

“அண்மையில் நான் நிறைவுசெய்த பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக உள்ள செயற்றிட்டத்துக்கமைய, தண்ணீர் பற்றாக்குறை நிலவும் கிராமங்களில் நீர் விநியோகத்தை பெற்றுக்கொடுப்பதற்காக பல வழிகளில் செயற்பட்டிருந்தோம். 

“நாடளாவிய ரீதியிலும் சமூக மட்டத்திலும் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றை தீர்ப்பதற்கான ஒரு வழிகாட்டியாக என்னாலான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, நான் சமாதான நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி போன்ற இலக்குகளை அடைய முயற்சித்து வருகிறேன்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் 

“தற்போது நான் குடும்ப வன்முறை தொடர்பான ஆய்வொன்றை நடத்தி வருகிறேன்.நாட்டில்  குடும்ப வன்முறைகளால் பாரதுரமான சீரழிவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் முகங்கொடுப்பவர்களை கண்டறிந்து, அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களை மீட்பதும் மிகப் பெரும் கடமையாக உள்ளது.

பெண்களுக்கு தொழில்வாய்ப்பு

“பெண்களுக்கு அனைத்து வழிகளிலும் நாம் பக்கபலமாகவே இருக்கிறோம். ஏனென்றால், குடும்ப வன்முறைகளில் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எமது ஆய்வின்படி, வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளே குடும்ப வன்முறைகளால் பெருமளவு சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர்.

அதற்காக குடும்ப வன்முறைகள் இடம்பெறும் பகுதிகளுக்குரிய பிரதேச செயலகங்களை நாடி, அரசினதும் அரசு சாராத நிறுவனங்களினதும் பூரண ஒத்துழைப்போடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.அதுமட்டுமன்றி, குடும்ப வன்முறைகளில் சிக்கி வாழ்வே கேள்விக்குறியாகி நிற்பவர்கள் வாழ்வதற்கான வளங்களையும் அமைத்துக்கொடுக்கிறோம். முக்கியமாக, தொழிலின்றி வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிறு கைத்தொழில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்குகிறோம். இதனுடாக வீடுகளில் இடம்பெற்றுவரும் வன்முறைக் குற்றங்கள் குறைவதோடு, பெண்கள் தங்களது பொருளாதார நிலைமையையும் உயர்த்திக்கொள்வதற்கு ஒரு வழியாக அமைகிறது.

இதுபோன்ற நலன்களை வழங்க அரசு மற்றும் அரசு சாராத தொண்டு நிறுவனங்கள் எம்மோடு கைகோர்த்து வேகமாக செயற்பட்டாலும் கூட, நானும் என்னால் முடிந்தளவு உதவுகளை சமூக அக்கறையோடு செய்து வருகிறேன்.

எல்லோரும் வாழவேண்டும்

“இந்த சமூகத்தில் தான் மட்டுமே முன்னேறவேண்டும் என நினைப்பவர்களே அதிகம். நான் மட்டும் முன்னேறினால் போதும் என்று நினைக்காமல் இந்த சமூகத்தில் வாழ்கிற அனைவரும் முன்னேறவேண்டும், உன்னதமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்து, சக மனிதர்களின் பிரகாசமான வாழ்க்கைக்கு உறுதுணையாக நின்று செயற்படக்கூடிய ஒரு சமூகத்தை நாம் உருவாக்குவதே இன்றைய தேவையாக உள்ளது.

பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்…

“தொழில்நுட்பம், கல்வி, சமூகத்தோடு இணைந்து வாழக்கூடிய ஒரு சூழல் நான் இருப்பதால் சக மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் இயங்குகிறேன்.

ஒரு பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை சமூகத்துக்கு என் வாயிலாக உணர்த்தியிருக்கிறேன். மற்றவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாகவும் விளங்குகிறேன்.

நான் கடந்து வந்த கடினமான பாதை, சந்தித்த இடையூறுகள், தடைகள், அவற்றையெல்லாம் உடைத்து முன்னேறிய கதைகளை என் சார்ந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதுண்டு.அதனுடாக அவர்கள் தங்களது இலட்சியத்தை அடைந்து வாழ்க்கையில் பிரகாசிப்பதற்கான செயற்றிட்டங்களை ஒரு வழிகாட்டியாக நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments