ஃபயர்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ‘பிக் பொஸ்’ புகழ் பாலாஜி முருகதாஸ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரன்னர்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சிதம்பரம் ஏ. அன்பழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ரன்னர்’ எனும் திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார். துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் காலெப், கெல்வின் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பாலாஜி முருகதாஸின் விளையாட்டு வீரருக்குரிய தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.