‘ஜோ’ படத்திற்குப் பிறகு சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கதவை திறந்தாயே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர் , அருணாச்சலேஸ்வரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வை எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கதவை திறந்தாயே நுழைந்தேன் பாயும் காற்றாக உயிரை திறந்தாயே வெடித்தேன் சீரும் ஊற்றாக..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் பின்னணி பாடகி சிந்தூரி விஷால் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மேலத்தேய தாள லய பின்னணியில் காதல் ததும்பும் வரிகள், வசீகரிக்கும் குரல்கள், மெல்லிசை, ஆகிய அம்சங்களுடன் இந்தப் பாடல் உருவாகி இருப்பதால் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.