எமது நாட்டுப் பிரசைகளில் சிறு பகுதியினர்தான் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களது வன்மங்கள் கொடூரங்கள் அவர்கள் மீது ஆத்திரம், அருவருப்பு,பயம்,பயங்கரம் ஆகிய உணர்வுகளை எம்மீது தூண்டி விடுகின்றன.
மேலேட்டமாகப் பார்த்தால், இவைதான் அவர்கள் பற்றிய பதிவுகளாக உள்ளன. அவர்களது சமூக விரோதச் செயல்கள் எதிர்மறையான உணர்வுகளை எம்மீது விதைத்து வருகின்றன. ஆனால்,அவர்கள் பற்றி அறிவியல்,உளவியல் , சமூகவியல், பொருளியல், மானுடவியல் ரீதியாக ஆழமான பார்வையில் நோக்குகின்ற போது அவர்கள் பரிதாபத்துக் குரிய பலிக்கடாக்கள் எனபதை உணரமுடியும்.
இவர்களை சமூக,பொருளாதார, மானுடவியல் ரீதியாக உளவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால்,சிலரது சுயநலத் தேவைகளுக்காக வளர்க்கப்பட்டு வஞ்சிக்கப்படுகின்றார்கள் என்பதை அறியலாம். அரசியல்வாதிகள்,அதிகார நெருப்பர்கள் அப்பாவிகளாக வாழவேண்டியவர்களை தமது தேவைக்காகப் பயன்படுத்தி விட்டு தேவை முடிந்த பின்னர், அவர்களை கைகழுவி விடுகின்றனர் அல்லது அழித்து விடுகின்றனர்.
‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ இப்பாடலடியானது ஒருவரது வளர்ப்பு முறைதான் நல்லவர் தீயவரை உருவாக்கி விடுகன்றது என்பதை உணர்த்துகின்றது.சூழலியலாளர் வற்சன் (Watson) அவர்களும் பிள்ளை வளர்ப்பில் சூழலின் தாக்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பாதாளக் குழு உறுப்பினர்கள் ஆரம்பத்தில் பெரும்பாலும் வறுமை,தொழிலின்மை,சமூகக் கணிப்பின்மை காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள், இளைஞர்களை அதிகார சக்தியினர், அரசியல்வாதிகள்,பண முதலையர்கள் சிலர் சுயநலத் தேவைகளுக்காக கைக்கூலிகளாகப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் இலாபத்தை ஈட்டித் தரும் வரை முதலீட்டுப் பண்டர்களாகக் கணிக்கப்படுகின்றனர். இவர்கள் எங்காவது மாட்டிக் கொண்டு,வாக்குமூலங்கள் அளிக்கப்போகின்றார்கள் என்றால், இக்கருவியர்களை அவர்களை இயக்கும் கருத்தார்கள் அழித்து விடுகின்றனர்.
இவ்விடயத்தில் சில அரசியல்வாதிகள்,பண முதலைகளும் உள்ளனர். வெலேசுதா என்னும் பாதாளக் குழுத் தலைவர் மாட்டிக் கொண்டு வாக்கு மூலம் அளிக்கும் போது கொழும்புக்காரரான பணமுதலையும் அரசியல்வாதியுமான ஒருவருக்குத் தான் மாதாந்தம் 60 இலட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபா வரை கப்பம் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.
அந்த அரசியல்வாதி ஒரு தடவை கொலையாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருந்த போது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பொதுமன்னிப்பின் கீழ் அவரை விடுவித்தும் இருந்தார்.இவ்வாறு பாதாளக் குழுவினர், முதலையர்களுக்குப் பயன்படுகின்றார்கள். முதலையர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டால், அவர்களையே விழுங்கியும் விடுகின்றார்கள் அல்லது போட்டிக் குழுக்கள் மூலம் அழித்தும் விடுகின்றார்கள்.
இப்படியானவர்களுக்கு கையூட்டு நோக்கான பொலிஸார் சிலர். படையினர் சிலர் சுய தேவை நோக்க அடிப்படையில் பங்காளிகளாகவும் உள்ளனர்.தற்போது ஆயுட்கால சிறையிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் இப்டியானவர்களில் ஒருவராவார். எனவே, பாதாளக் குழுவினர் விடயத்தில் எய்தவர்கள் இருக்க, அம்பர்களே மாட்டிக் கொள்கின்றனர். இங்கு சமூக,பொருளாதார, உளவியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்ட பாதாளக்குழுவினர் பலர் பரிதாபத்துக்குரியவர்களாக உள்ளனர்.
இவர்களது ஆயுட்காலம் என்பது பெரும்பாலும் 20 வயதில் இருந்து 45 வயதுக்குள் முடிந்து விடுகின்றன. இவர்களது பெற்றோர், மனைவி பிள்ளைகள் சமூகச் சாக்கடைக்குள் ஒதுக்கப்படுகின்றனர். இதனால் அவர்களும் பாதாளக் குழுவினரின் பிள்ளைகளும் பாதாளக் குழுவினரின் வாரிசுகளாக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே, பாதாளக் குழுவினரைக் கையாள்வதற்கு அறிவியல்,உளவியல் சமூகவியல் ஒழுக்கவியல் ஆற்றலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் தேவையாகவுள்ளது. அதற்கும் இந்நாட்டில் வெற்றிடங்கள் உள்ளன.பாதாள உறுப்பினர்களை கொல்வதால் மட்டும் பிரச்சினைகள் முடியப் போவதில்லை.
கொல்லப்பட்டவரின் பிள்ளைகள், சகோதரர்கள் மீண்டும் பாதாளக் குழு உறுப்பினர்களாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆத்திரத்தால் அவசரத்தால் அல்லாமல்,அறிவியல் உளவியலால்தான் பாதாளக் குழுவினரைக் கையாளவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
இவ்விடயத்தில் சமூகவியலாளர்கள், கல்வியாளர்கள், உளவியலாளர்கள், மனித உரிமையாளர்கள், பண்பட்ட அரசியலாளர்கள் கூட்டாக இணைந்து ஆயவுகள் செய்து முடிவைப் பெற்று பாதாளக்குழுவினைக் கையாள முடியும், கட்டுப்படுத்தவும் முடியும்.
என்கவுண்டர் முறை பழிக்குப் பழிவாங்குதலையே நாட்டில் அதிகளிக்கச் செய்யும்.இம்முறை பரிகாரமாக அமைந்திருந்தால் எப்போதோ பாதாளர்கள் முடிந்திருப்பார்கள்.பாதாளகளின் உற்பத்திக்கான மூலகர்த்தாக்களை விட்டு விட்டு,பாதாள உற்பத்திகளைக் கட்டுப்படுத்த முடியாது.இந்த இடத்தில் பாதாளர்கள் உற்பத்தியாகின்றார்களா? உற்பத்தியாக்கப்படுகின்றார்களா? என்பதை அறிந்தால் அவர்கள் பயங்கரமானவர்களா? பரிதாபத்துக்குரியவர்களா?என்பதைப் புரிய முடியும்.