வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் குழப்பம் விளைவித்த சந்தேக நபரை, தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
சுவீடன் மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை 12.45 மணியளவில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது,
குடிபோதையில் இருந்த சந்தேக நபர், இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் சீண்டல் செய்ததாகவும், மற்ற பயணிகளை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.