லாகூர் கடாபி விளையாட்டரங்கில் புதன்கிழமை (26) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய மிகவும் தீர்க்கமான பி குழுவுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை ஒரு பந்து மீதம் இருக்க 9 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டது.
இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ணப் போட்டியிலும் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து, முதல் சுற்றுடன் சம்பயின்ஸ் கிண்ணத்திலிருந்து வெளியேறும் 3ஆவது நாடானது.
ஏ குழுவிலிருந்து வரவேற்பு நாடான பாகிஸ்தானும் பங்களாதேஷும் ஏற்கனவே முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகி இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் இன்றைய வெற்றியில் இப்ராஹிம் ஸத்ரான் குவித்த சாதனைகள் மிகுந்த 177 ஓட்டங்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் பதிவு செய்த 5 விக்கட் குவியலுடனான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி என்பன பிரதான பங்காற்றின.
அத்துடன் ஆப்கானிஸ்தானின் மிகத் திறமையான களத்தடுப்பும் இந்த வெற்றியில் பங்காற்றியிருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான், ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் குவித்த சாதனைமிகு துடுப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.
அப் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் 177 ஓட்டங்களைக் குவித்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் தனிநபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் 165 ஓட்டங்களைக் குவித்து ஏற்படுத்திய சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் முறியடித்தார்.
அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சார்பாக ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற சாதனையையும் ஸத்ரான் நிலைநாட்டினார். அது மட்டுமல்லாமல் ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியிலும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியிலும் சதம் குவித்த முதலாவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனைக்கும் உரித்தானார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.
ஒன்பதாவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழத்தப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை வெறும் 37 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், ஆரம்ப வீரர் இப்ராஹிம் சத்ரான் துணிச்சலை வரவழைத்து அற்புதமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடி சாதனைமிகு சதம் குவித்து அணியை மீட்டெடுத்தார்.
2025 சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னர் உபாதை காரணமாக சுமார் 11 மாதங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த 23 வயதான இப்ராஹிம் ஸத்ரான் தனது மீள் வருகையில் இரண்டாவது போட்டியில் 146 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்களுடன் 177 ஓட்டங்ளைக் குவித்தார்.
இதனிடையே 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 103 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயுடன் 72 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் மொஹம்மத் நபியுடன் 111 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
ஹஷ்மத்துல்லா ஷஹிடி 40 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 41 ஓட்டங்களையும் மொஹம்மத் நபி 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 317 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் இரண்டு விக்கெட்கள் வீழ்ந்த (30 – 2 விக்.) பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட், ஜோ ரூட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
டக்கெட் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஹெரி ப்றூக் 25 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
இதனை அடுத்து ஜோ ரூட், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
ஆனால், ஜொஸ் பட்லர் 38 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அஸ்மத்துல்லா ஓமர்ஸாயின் பந்துவீச்சில் தவறான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.
லியாம் லிவிங்ஸ்டோன் (10) நீண்ட நேரம் தாக்கு பிடிக்காமல் ஆட்டம் இழந்தார்.
இந் நிலையில் ஜெமி ஓவர்ட்டனுடன் 7ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். அது இங்கிலாந்து அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.