அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த பி குழுவுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக நாணய சுழற்சி நடத்தப்படாமல் கைவிடப்பட்டது.
பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய இப் போட்டி மழை காரணமாக கைவிடப்படுவதாக மாலை 5.30 மணிக்கு உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டது.
இப் போட்டி கைவிடப்பட்டதால் இக் குழுவிலிருந்து நான்கு அணிகளும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறந்த வண்ணம் இருக்கிறது.
ஏ குழுவில் இருந்து இந்தியாவும் நியூஸிலாந்தும் ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுவிட்டன.
பி குழுவில் இன்றைய போட்டி கைவிடப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்கா 3 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது.
அவுஸ்திரேலியாவும் 3 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது.