நீண்டகால கிரிக்கெட் வைரிகளான இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்ற பி குழுவுக்கான சம்பியன்ஸ் கிண்ண இரண்டாவது போட்டியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
ஜொஷ் இங்லிஸ் குவித்த அபார சதத்தின் உதவியுடன் ஆங்கிலேயரை அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொள்ள உதவியது.
மெத்யூஸ் ஷோர்ட், அலெக்ஸ் கேரி பெற்ற அரைச் சதங்களும் க்லென் மெக்ஸ்வெலின் அதிரடியும் அவுஸ்திரேலியாவின் வெற்றியில் பங்காற்றி இருந்தன.
முன்னதாக இங்கிலாந்து சார்பாக பென் டக்கெட் அபார சதம் குவித்த போதிலும் அது இறுதியில் வீண் போனது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 352 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 356 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலியா சற்று அதிகரித்துக்கொண்டது.
அதேவேளை இன்றைய தோல்வியினால் அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் முதல் இரண்டு விக்கெட்கள் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
ட்ரவிஸ் ஹெட் 6 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
மெத்யூ ஷோர்ட் (63), மார்னுஸ் லபுஸ்ஷேன் (47) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டு வெளியேறினர். (136 – 4 விக்.)
இந் நிலையில் ஜோடி சேர்ந்த ஜொஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 152 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
அலெக்ஸ் கேரி 63 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய ஜொஷ் இங்லிஸ் தனது 28ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கன்னிச் சதத்தைக் குவித்தார்.
அவரும் க்ளென் மெக்ஸ்வெலும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் மகத்தான வெற்றியை உறுதிசெய்தனர்.
ஜொஷ் இங்லிஸ் 86 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 120 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
க்லென் மெக்ஸ்வெல் 15 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 351 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் பென் டக்கெட் மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 143 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 165 ஓட்டங்களைக் குவித்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பில் சோல்ட் (10), ஜெமி ஸ்மித் (15) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (43 – 2 விக்.)
ஆனால், பென் டக்கெட், ஜோ ரூட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 158 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
ஜோ ரூட் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஹெரி ப்றூக் 3 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் பென் டக்கெட்டுடன் 5ஆவது விக்கெட்டில் இணைந்த அணித் தலைவர் ஜொஸ் பட்லர் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
ஜொஸ் பட்லர் 23 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டோன் (14), ப்றைடன் கார்ஸ் (8) ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறினர்.
மறுபக்கத்தில் திறமையை வெளிப்படுத்திய பென் டக்கெட் 48ஆவது ஓவரில் 165 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் ஜொவ்ரா ஆச்சர் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் பென் த்வார்ஷுய்ஸ் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஜொஷ் இங்லிஸ்.