உக்ரைனிற்கான சமாதான உடன்படிக்கையை உருவாக்குவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற 19 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
உக்ரைனுடன் இணைந்து ஐரோப்பிய கூட்டணி டிரம்ப் முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கு மாற்றீடான ஒன்றை உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு படையணியொன்றை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் இணைந்து இந்த திட்டத்தினை உருவாக்குவார்கள் பின்னர் அதனை அமெரிக்க ஜனாதிபதியிடம் கையளிப்பார்கள்.
பிரான்ஸ் பிரிட்டிஸ் தலைவர்கள் ரஸ்யா உக்ரைன் இடையிலான ஒருமாத யுத்த நிறுத்தம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் வான்வெளி கடல் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்கும் தாக்குதல்கள் நிறுத்தப்படும்.
இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் உக்ரைனிற்கு ஐரோப்பிய படையினர் அனுப்பப்படுவர்.
யுத்த நிறுத்தம் சாத்தியமானதும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் ரஸ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளிற்கும் இடையில் உள்ள
800மைல் யுத்த சூன்ய பிரதேசத்தின் பொறுப்பு உக்ரைன் படையினருக்கு வழங்கப்படும்.
உக்ரைனிய படையினருக்கு பின்னால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவை சேர்ந்த 30,000 உறுதியளிக்கும் படை நிலைகொண்டிருக்கும்.
அவர்கள் உக்ரைனின் நகரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவுள்ளனர்.