இந்த மண்ணில் பிறந்து பெற்றோரின் ஆதரவுடனும், வழிகாட்டலுடனும் கல்வி கற்று அரசாங்க பணிக்காக காத்திருக்கும் பலருக்கும் அந்த அரசு பணி என்பது கிடைப்பதில்லை. அதற்காக ஓரிடத்தில் சோர்ந்து நிற்காமல் வாழ்வாதாரத்திற்காக வேறு ஏதேனும் சிறிய அளவிலான தொழிலை மேற்கொள்ள தயாராகிறோம்.
வேறு சிலர் தொழில் தொடங்காமல் மற்றவர்களிடம் மாத ஊதியத்திற்கு வேலை செய்வதை தங்களுடைய வாழ்வாதாரமாக மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கை அமையவில்லை என்ற மனக்குறையுடன் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள். இவர்கள் வாழ்க்கை வெற்றி பெறுவதற்கு அனுபவமும், காலமும் சில விடயங்களை எண்ணங்களாக தோன்ற செய்யும் .
ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் இருக்கும். இந்த தருணத்தில் நீங்கள் நினைத்த விடயங்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் பின்வரும் மந்திர வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவர்கள் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு திங்கள் கிழமையும், சதுர்த்தி திதியும் இணைந்து வரும் நாட்களில் இந்த வழிபாட்டை தொடங்கலாம். இத்தகைய தினத்தன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து ஆலயத்திற்கு சென்று விட வேண்டும். அதற்கு முன்பாக உங்களுடைய கையில் தேங்காய் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி அருகம் புல் மற்றும் செம்பருத்தி பூவாலான மாலையை சாற்றி மூன்று முறை வலம் வந்து விநாயகரை வணங்கி உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் விநாயகரை மூன்று முறை வலம் வந்து ‘ஓம் சர்வ சக்கர டம் டம் ஸ்வாஹா!’ எனும் மந்திரத்தை மூன்று முறை கூறிவிட்டு தேங்காயை சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும்.
இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகருக்கு உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். 21 நாட்கள் நிறைவு பெற்ற பிறகு விநாயகப் பெருமானுக்கு அபிசேகம் செய்து வஸ்திரம் சாற்றி சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரவேண்டும். இதன்பிறகு உங்களுடைய கோரிக்கை 48 நாட்களுக்குள் நிறைவேறும் அதிசயத்தை அனுபவத்தில் காணலாம்.