இங்கிலாந்துக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் பி குழுவுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் 177 ஓட்டங்களைக் குவித்து ஒரு போட்டியில் தனிநபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற ம்பியன்ஸ் கிண்ண சாதனையை நிலைநாட்டினார்.
சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் 165 ஓட்டங்களைக் குவித்து ஏற்படுத்திய சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் இன்று முறியடித்தார்.
இப்ராஹிம் ஸ்த்ரான் குவித்த அபார அதிரடி சதத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.
ஒன்பதாவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழந்தப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை வெறும் 37 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துணிச்சலை வரவழைத்து அற்புதமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடி சாதனைமிகு சதம் குவித்து அணியை மீட்டெடுத்தார்.
2025 சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னர் உபாதை காரணமாக சுமார் 11 மாதங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த 23 வயதான இப்ராஹிம் ஸத்ரான் தனது மீள்வருகையில் இரண்டாவது போட்டியில் 146 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்களுடன் 177 ஓட்டங்ளைக் குவித்தார்.
இதனிடையே 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 102 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயுடன் 6ஆவது விக்கெட்டில் மொஹமத் நபியுடன் 111 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 16 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.