Thursday, March 13, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்த்தாடுகிறது ஏறாவூர் அலிகார் ம.க.

பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்த்தாடுகிறது ஏறாவூர் அலிகார் ம.க.

லங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் தேசிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியும் கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரியும் விளையாடவுள்ளன.

இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று வியாழக்கிழமை (27) இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

அலிகார் அணிக்கு என்.எம். முன்சிப் தலைவராகவும் ஸாஹிரா அணிக்கு முபாஸல் ஸியார்ட்  தலைவராகவும் விளையாடுகின்றனர்.

இந்த இரண்டு அணிகளிலும் சில வீரர்கள் சில வருடங்களாக தொடர்ந்து விளையாடிவருவதால் இறுதிப் போட்டி இரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக சிட்டி லீக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (25) அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் கொழும்பு, ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியை எதிர்கொண்ட ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் சுமார் 40 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் ஏறாவூர் அலிகார் அணி வீரர் மொஹமத் முன்சிப் போட்ட அற்புதமான கோல் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

முன்சிப் தனது இடது காலால் உதைத்து போட்ட இந்த மின்னல் வேக கோல் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட வரலாற்றில் போடப்பட்ட அதிசிறந்த கோல் என போட்டியைக் கண்டுகளித்த இலங்கையின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் கூறினர்.

அலிகார் மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் வீரர்களில் ஐவர் கனிஷ்ட தேசிய அணியில் இடம்பெற்ற  அனுபவசாலிகள் ஆவர். அவர்கள் ஐவர் உட்பட ஏனைய வீரர்கள் தமது அணியின் வெற்றிகக்காக கடுமையாக முயற்சிக்கவுள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகள் கால்பந்தாட்டத்தில் பிரசித்திபெற்ற மருதானை ஸாஹிரா கல்லூரி அணியை வீழ்த்தி ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணி வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பெனல்டி முறையில் ஸாஹிரா வெற்றி

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரி அணியை 4 – 2 என்ற பெனல்டி முறையில் ஸாஹிரா கல்லூரி அணி வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றது. 

முழு நேரத்தின் போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்தன.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் அணி சார்பாக ஹரிஷும் 86ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர் எம்.எம்.எம்; சுஹெய்பும் தலா ஒரு கோலை போட்டனர். 

போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து மத்தியஸ்தரினால அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 4 – 2 என ஸாஹிரா வெற்றிபெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments