Tuesday, March 18, 2025
spot_img
Homeஅரசியல்அரச நிறுவனங்களின் நட்டத்திற்கு அரசியல் நியமனங்களே காரணம். சண்முகம் குகதாசன் MP 

அரச நிறுவனங்களின் நட்டத்திற்கு அரசியல் நியமனங்களே காரணம். சண்முகம் குகதாசன் MP 

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் பாதீட்டு விவாதத்தில் 2025 / 03/ 18 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

 

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான விவாதத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு தொடர்பாக எனது கருத்துகளை இந்த அவையில் எடுத்துரைக்க விழைகின்றேன்.

இன்று உலகில் உள்ள பொருளாதாரத்தினை விவசாயத்துறை, கைத்தொழிற்துறை, சேவைத்துறை எனப் பிரித்து பார்க்கலாம். பொருளியல் அறிஞரான டேவிட் ரிக்காடோ தனது ஒப்பீட்டு நன்மைக் கோட்பாட்டின்படி உலகில் உள்ள நாடுகள் குறைந்த உற்பத்திச் செலவுடன் சிறப்பாக உற்பத்தி செய்யக்கூடிய துறைகளில் தத்தமது வளங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் குறித்த உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சி அடைவதோடு, அதனை கட்டற்ற சந்தையில் பிற நாடுகளுடன் பரிமாற்றம் செய்வதன் மூலம் இரு பகுதியினரும் நன்மை அடைய முடியும் எனக் கூறினார்.

இந்த அடிப்படையில் சில நாடுகள் விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் நாடுகளாகவும் இன்னும் சில நாடுகள் கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளும் நாடுகளாகவும் மாறிவிட்டன. விவசாய உற்பத்திகளுக்கான விலைசார் கேள்வி நெகிழ்ச்சி குறைவாகவும் கைத்தொழில் உற்பத்திகளுக்கான விலைசார் கேள்வி நெகிழ்ச்சி அதிகமாகவும் உள்ளது. இதனால் ஒப்பீட்டு நன்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொண்ட நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறிவிட்டன.

 

விவசாய உற்பத்திகளை முதன்மையாக கொண்ட நாடுகள் குறை அபிவிருத்தி கொண்ட நாடுகளாக மாறிவிட்டன. எனவே நாமும் கைத்தொழில் துறையினை முதன்மையாக கொண்ட நாடாக மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

இந்தச் சூழலில், இந்த அரசால் முன்வைக்கப் பட்டுள்ள பாதீட்டில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு மீண்டெழும் செலவுக்காக 4.8 பில்லியன் ரூபாவும் மூலதன செலவுக்காக 8.6 பில்லியன் ரூபாவும் மொத்தமாக 13.4 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.9 பில்லியன் ரூபா அதிகமாகும். இது வரவேற்கத்தக்கது. எனினும் இந்த ஒதுக்கம் கைத்தொழில் துறையினை மேம்படுத்த வேண்டும் என நினைக்கின்ற நாட்டுக்கு போதுமானதல்ல .

எடுத்துக்காட்டாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் சீனி ஆலையானது மோசமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை மறுசீரமைக்க 26 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை பத்து மடங்காக அதிகரித்தால் கூட அதனை மீள செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதற்கான ஒதுக்கீடு பன்மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் .

 

நமது நாட்டில் கைத்தொழில் துறையின் பங்கை அதிகரிக்க வேண்டுமானால், இதில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் பற்றி விவாதிப்பது அவசியம். மேலும், உலகின் பிற நாடுகளின் வெற்றிகரமான நடைமுறைகளிலிருந்து பாடங்களைக் கற்று, இலங்கைக்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்திக்காக தென் கொரியா மற்றும் ஜெர்மனி முதலிய நாடுகள் தங்கள் பாதீட்டில் 5-7% ஆன தொகையை ஒதுக்குகின்றன. இந்த நாடுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), தொழில்நுட்ப ஏற்பு ( Technology Adoption ), சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (SME) ஆதரவை முன்னுரிமையாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் அவை உலகளவில் போட்டித்திறன் மிக்க நாடுகளாக உயர்ந்துள்ளன.

இதற்கு மாறாக, இலங்கையில் இத்துறைக்கான ஒதுக்கீடு பாதீட்டில் 0.3 வீதமாக உள்ளது. இந்தக் குறைந்த ஒதுக்கீடானது, உலகளவில் போட்டியிடும் நமது திறனைக் குறைத்து, உள்நாட்டுத் தொழில்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

மேலும், இந்தியா மற்றும் வியட்நாம் முதலிய நாடுகள் எண்ம மயமாக்கல், பசுமை ஆற்றல் மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறையில் புரட்சிகளைத் தொடங்கியுள்ளன. இந்தப் புரட்சிகள் அவர்களது பொருளாதாரத்தை மாற்றியமைத்து, பெருமளவான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதோடு வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்த்துள்ளன.

இலங்கையில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது.

1. நிதி அணுகல் இன்மை: தொழில்முனைவோர், குறிப்பாக கிராமப்புறங்களில், தொழில் தொடங்க அல்லது விரிவாக்க கடன் அல்லது நிதியுதவி பெறுவதில் சிரமப்படுகின்றனர்.

2. பழைய தொழில்நுட்பம்: நமது தொழில்கள் பழைய எந்திரங்கள் மற்றும் செயல்முறைகளை நம்பியுள்ளன, இது உற்பத்தித் திறனைக் குறைக்கிறது.

3. ஏற்றுமதி மாறுபாடு இன்மை: தேயிலை மற்றும் ஆடை போன்ற பாரம்பரிய ஏற்றுமதிகளை மட்டுமே நம்பியிருப்பது, உலகச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு நம்மை பாதிப்படைய வைக்கிறது.

4. வினைத்திறன் மிக்க தொழிலாளர் பற்றாக்குறை: கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் திறன்களுக்கும் நவீன தொழில்களின் தேவைகளுக்கும் இடையே பெரியதோர் இடைவெளி உள்ளது.

இந்தச் சவால்களை சமாளிக்க, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் .

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திக்காக பாதீட்டில் குறைந்தது ஐந்து வீதமான நிதி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), தொழில்நுட்ப மேம்பாடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் (SME) ஆதரவுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக,

1. எண்ம மயமாக்கல்: இந்தியாவின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தைப் போல தொழில்களை நவீனமயமாக்கி, திறனை மேம்படுத்த வேண்டும். ( This should be in effective system )

2. பசுமை ஆற்றல்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகளாவிய நிலைத்தன்மைப் போக்குகளுடன் இணைய வேண்டும்.

3. ஏற்றுமதி மாறுபாடு: தகவல் தொழில்நுட்ப சேவைகள், மருந்து உற்பத்தி மற்றும் வேளாண்மை சார்ந்த உற்பத்தி முதலிய உயர் மதிப்புள்ள தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.

4. நிதி அணுகலை மேம்படுத்தல்

– தொடக்க நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (SME) ஒரு தனி நிதியை உருவாக்க வேண்டும்.

– குறைந்த வட்டி கடன்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்க வேண்டும்.

– பன்னாட்டு நிதி நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும்.

5. திறன் மேம்பாடு:

– பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நடுவங்களோடு இணைந்து தொழில் சார்ந்த பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

– கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கான பயிற்சித் திட்டங்களைத் தொடங்க வேண்டும்.

6. பொது -தனியார் கூட்டு முயற்சிகள் (PPPs): அரசாங்கம் மற்றும் தனியார் துறையிடையே கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இது முதன்மையான தொழில்களில் புதுமையை ஊக்குவிக்கும்.

அடுத்து அரச தொழில் முயற்சிகளை எடுத்துக் கொள்வோமானால், இவை நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் முதன்மையான பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கல் ,வறுமை ஒழிப்பு மற்றும் நிதி உறுதித்தன்மை ஆகியவற்றில் வளரும் நாடுகளில், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுச் சேவைகளை வழங்குவதில் முதன்மையான பங்காற்றுகின்றன.

 

இலங்கையில் அரசு நிறுவனங்கள், இரண்டாம் உலகப் போர் காலத்தில் இன்றியமையாத பொருட்களை வழங்கும் நோக்குடன் உருவாக்கப் பட்டன. நம் நாட்டில் அரசுக்கு சொந்தமான 527 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

முறையற்ற அரசியல் நியமனங்கள், அதன் விளைவான வினைத்திறன் அற்ற மேலாண்மை, அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனங்கள், தேவையற்ற செலவுகள், ஊழல், நடைமுறைக்கு ஏற்ற மறுசீரமைப்பு இன்மை முதலிய காரணங்களால் இவ் பொதுத்துறை முயற்சிகள் நட்டத்தில் இயங்குகின்றன.

அரசு மற்றும் தனியார் பங்குடமை முயற்சிகள் உருவாக்குதல், சரியான அளவில் மறுசீரமைப்புச் செய்தல், கூட்டுறவு மேலாண்மையை ஊக்குவித்தல், எண்ம மயமாக்கல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல், தொடர்ச்சியான கணக்காய்வு மற்றும் கண்காணிப்புகள் முதலியவற்றின் மூலம் இச்சிக்கலுக்கு தீர்வு காணலாம்.

 

தெற்காசியாவில், புத்தாக்கம் மற்றும் தொழில் முயற்சிக்கான அமைவிட நிலையமாக மாறுவதற்கு இலங்கைக்கு சிறப்பான ஆற்றல் உள்ளது. பிற நாடுகளின் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொண்டு, நமது குறைபாடுகளை சரி செய்வதன் மூலம், வேலைவாய்ப்பை உருவாக்கும், ஏற்றுமதியை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு துடிப்பான தொழிற் துறையை உருவாக்க முடியும்.

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; இது நமது மக்களுக்கு, குறிப்பாக நமது இளைஞர்களுக்கு, பெரிய கனவுகளைக் காணவும், அவர்களின் வேட்கைகளை அடையவும் வாய்ப்பு அளிப்பதாகும்.

இறுதியாக , இந்த முன்மொழிவுகளை செயல்படுத்துவதில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சரைக் கேட்டுக் கொள்வதோடு, செழிப்பானதும் , புதுமையானதும் உலகளாவிய போட்டித்தன்மை கொண்டதுமான இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனக் கூறிக்கொண்டு எனது உரையினை நிறைவு செqualitறி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments