நடிப்புத் திறனால் இந்திய ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தென்னிந்திய நட்சத்திர நடிகர்களான தனுஷ் – நாகார்ஜுனா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘குபேரா ‘எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேகப் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா ‘ எனும் திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷர்ப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ எனும் திரைப்படமும், நாகார்ஜுனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நா சாமி ரங்கா’ எனும் திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குபேரா’ திரைப்படம் பெரும் வெற்றி பெற வேண்டும் என இரண்டு நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.