வீரகேசரியின் முன்னாள் யாழ். நிருபர் அமரர் எஸ். செல்லத்துரையின் நூறாவது பிறந்தநாள் பெப்ரவரி 26ஆம் திகதியாகும். அவரைப் பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு இதோ…
இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் பிராந்திய செய்தியாளராக பணியாற்றியவர்களில் வீரகேசரி தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றிய அமரர் செல்லத்துரை அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளார் என்பதை இலங்கை பத்திரிகைகளில் இருந்து உணரக்கூடியதாக இருக்கிறது.
அமரர் செல்லத்துரை 1925ஆம் ஆண்டு அச்சுவேலி நாவற்காடு கிராமத்தில் பிறந்தார். அவர் தனது பாடசாலைக் கல்வியை அன்றைய க.பொ.த. சாதாரண தரத்துடன் முடித்துக்கொண்டதும் பத்திரிகை ஆர்வலராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணம், சுன்னாகத்திலிருந்து வந்த ஈழகேசரி மற்றும் கொழும்பில் இருந்து வந்த வீரகேசரி பத்திரிகைகளுக்கு ஒரு பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
அவர் 1947ஆம் ஆண்டளவில் ஈழகேசரி, வீரகேசரி பத்திரிகைகளின் அச்சுவேலி நிருபராக செய்திச் சேவையில் இணைந்துகொண்டார். தமிழறிவு கொண்டவர். வடக்கு மக்களின் எண்ணங்கள், நிலைப்பாடுகளை அவர் நன்றாக மனதில் கொண்டிருந்தார்.
அமரர் செல்லத்துரை பின்னர் 1950களின் பிற்பகுதியில் வீரகேசரியின் யாழ்ப்பாணம் நிருபராக நியமனம் பெற்றார். அந்நேரம் அவருக்கு சிலாபம் கல்வி வட்டாரத்தில் உள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலையொன்றுக்கு உதவி ஆசிரியராக நியமனம் கிடைத்தபோதும் அதனை நிராகரித்து வீரகேசரியின் யாழ்ப்பாணச் செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் அச்சுவேலியில் இருந்தும் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வீரகேசரிக்கு தினமும் செய்திகள் அனுப்பிவந்தபோதும் யாழ். நகரில் இருந்து பணியாற்றக்கூடியவாறு அலுவலகம் ஒன்று இருக்கவில்லை. இதனால் அவர் தினமும் செய்திகளை சேகரித்துக்கொண்டு யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த மல்லிகை இலக்கிய இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சலூனில் பின்பக்கத்திலிருந்து செய்திகளை எழுதி தபாலில் கொழும்புக்கு அனுப்பிவைப்பார்.
பின்னர், 1960களில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் உள்ள மின்சார வீதியில் அமைந்த கடைக்கட்டடம் ஒன்றில் வீரகேசரி கிளைக்காரியாலயம் ஆரம்பிக்கப்படவே அங்கிருந்து தனது பணியில் செயற்பட்டார். தொடர்ந்து, சில ஆண்டுகளில் கிளைக்காரியாலயம் புகையிரத நிலைய வீதிக்கு மாற்றப்பட்டு இன்றும் அங்கேயே செயற்பட்டு வருகிறது.
அதன் பின்னர், யாழ். கிளைக் காரியாலயத்துக்கு தொலைபேசி இணைப்பு கிடைத்தமையினால் தொலைபேசி ஊடாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களிடம் கதைத்துப் பேசி செய்திகளைத் திரட்டுவதுடன் தான் சேகரித்துவந்த செய்திகளையும் விரைவாக எழுதி காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் இரவுநேர புகையிரதத்தில் பொதிகள் சேவை மூலம் செய்திகளை அனுப்பிவைப்பார். இவர் அனுப்பிவைக்கும் செய்திகள், புகைப்படங்கள் உள்ளடங்கிய பொதியை வீரகேசரி நிறுவனம் கோட்டை புகையிரத நிலையத்தில் பெற்றுக்கொண்டு மறுநாள் பத்திரிகையில் அவரது அனைத்துச் செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரிப்பார்கள். அத்துடன் முக்கிய செய்திகள் அன்றாடம் கிடைத்தால், அவற்றை தொலைபேசி மூலம் வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு வழங்குவார்.
அன்றைய காலப்பகுதியில் கொழும்பு உட்பட நாட்டின் எந்த பகுதிக்கு தொலைபேசி அழைப்பு பெற வேண்டும் என்றாலும் யாழ்ப்பாணம் தொலைபேசி அலுவலகம் அழைப்புக்களைப் பெறவேண்டிய முறை இருந்து வந்தது.
அவரது காலத்தில் அதாவது 1960ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து “ஈழநாடு” தினசரி வெளிவரத் தொடங்கியிருந்தது. கொழும்பில் இருந்து வீரகேசரியுடன் தினகரன் பத்திரிகையும் யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் தினகரன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த நிலையில் வீரகேசரி ஓர் இந்தியப் பத்திரிகை என்ற கருத்து நிலவி வந்தது. அதேவேளை வீரகேசரிக்கு பிரதேச செய்தியாளர்களும் அன்றைய காலத்தில் குறைவாகவே இருந்தனர்.
இந்நிலையில் இவர் தனது ஆற்றலாலும் கெட்டித்தனத்தாலும் நிறைய செய்திகளை அனுப்பிவந்தார். இதனால் அதிகளவு வடக்கு செய்திகள் வீரகேசரியில் இடம்பிடித்து வந்தது. இதனால் வடபுல வாசகர்கள் மத்தியில் வீரகேசரி ஓர் இந்தியப் பத்திரிகை என்ற எண்ணம் வாசகர்கள் மத்தியிலிருந்து விலகி ஒரு தேசிய பத்திரிகையாக ஏற்றுக்கொள்ளும் நல்லெண்ணம் உருவானது. இதன் மூலம் வீரகேசரி வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும் மக்களின் பேரபிமானத்தைப் பெற்றது.
அமரர் செல்லத்துரை 1982இல் காலமானபோது அவரது நினைவாக அச்சுவேலி மகா வித்தியாலயத்தில் அப்பகுதி மக்களால் நடத்தப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் உடுப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கே.ஜெயக்கொடி, “வீரகேசரி பத்திரிகையை வடக்கில் வாசகர்கள் மத்தியில் நிலைநாட்டிய பெருமை அமரர் செல்லத்துரையையே சாரும். இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கி வீரகேசரியை உயர வைத்தவர் செல்லத்துரை தான்” எனக் கூறினார்.
இவ்வாறு வீரகேசரி வடபுலத்தில் செல்வாக்கு நிலைநாட்டிய வேளையில் 1965ஆம் ஆண்டு கடமையில் இருந்த ஆசிரியரும் அவரது குழுமத்தினரும் வடக்கின் பல பிரதேசங்களிலும் செய்தியாளர்களை நியமித்து வடபுலத்து செய்திகளை மென்மேலும் அதிகரிக்கச் செய்தனர்.