Thursday, March 13, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துங்கள் - அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி வலியுறுத்தல்.

1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துங்கள் – அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி வலியுறுத்தல்.

1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். 

கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3% – 4% ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்குமான அவசியத்தையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். 

மேலும் அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் கிடையாது எனவும், அதற்கு வினைத்திறன் இன்மையே காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திருப்திகரமான அரச சேவையை உருவாக்கி அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

2025 வரவு செலவுத் திட்ட பரிந்துரைகளில் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது.

தற்போதும் அரச சேவையில் 30,000 வெற்றிடங்கள் அறியப்பட்டிருப்பதால், அதற்காக ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும், அதனால் அரச சேவையின் நடுத்தர பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் முழுமையடையும் என்றும் கூறினார். 

அபிவிருத்தி என்பது கட்டிடங்கள், பாலங்களை கட்டுவது மாத்திரமல்ல என்றும்,வீழ்ச்சியடைந்திருக்கும் சமூகக் கட்டமைப்பை உயர்த்தி வைக்க வேண்டியது அவசியம் என்றும், அதில் முதன்மைப் பணி மாவட்ட செயலாளர்களை சார்ந்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.  

மேலும், இதன்போது மாவட்டங்களுக்கு அமைவான பிரச்சினைகள் குறித்து அரசாங்க அதிபர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச நிருவாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார மற்றும் மாவட்டச் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments